சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி வெளிமாநிலத் தொழிலாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சிங்கம்புணரியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பிஹார், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தவிர செங்கல் சூளையிலும் பணிபுரிகின்றனர்.
இவர்கள் அனைவரும் கரோனா ஊரடங்கால் சிங்கம்புணரியிலேயே முடங்கினர். இதனிடையே அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தங்களது நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் நிறுவனங்கள் கண்டுகொள்ளாததால் இன்று சிங்கம்புணரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை வட்டாட்சியர் பஞ்சவர்ணம், இன்ஸ்பெக்டர் சத்யசீலா ஆகியோர் சமரசப்படுத்தினர்.
மேலும் 2 நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு திரும்பிச் சென்றனர்.