ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர்.
வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் இங்கிருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளி நாடுகளுக்கு வெட்டிவேர் அனுப்புவது தடைப்பட்டது.
இப்பகுதியில் பயிர் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 டன்னுக்கும் மேலான வெட்டிவேர் தேக்கமடைந்தது. மேலும், இதில் இருந்து தயாரிக்கப்பட்ட பாய், தலையணை, காலணி மற்றும் அழகு சாதனப் பொருட்களும் விற்பனை இல்லாமல் தேங்கின.
இந்த நிலையில், வெட்டிவேரை வைத்து என்ன செய்யலாம் என யோசித்த வெட்டிவேரை பயிர் செய்யும் கடலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரசன்னகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து வெட்டிவேரில் இருந்து முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கினர்.
வெட்டிவேரை நன்கு சுத்தம் செய்து நறுமணமிக்க மருத்துவ குணம் கொண்ட அழகிய முகக்கவசங்கள் உருவாயின. நறுமணத்துடன் இருக்கும் இந்த முகக்கவசம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரூ.30க்குக் கிடைக்கும் இந்த முகக்கவசங்கள் பயன்படுத்திவிட்டு மீண்டும் துவைத்துப் பயன்படுத்தலாம்.
வெட்டி வேர் நோய் எதிர்ப்பு அதிகம் தரும் என்றும், நுரையீரலை தூய்மையாக வைத்திருக்கும் என்றும், சித்த மருத்துவத்தில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது. கடலூரில் மிகவும் பிரபலம் அடைந்துள்ள இந்த வெட்டிவேர் முகக்கவசங்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் தயாரிக்கப்பட்டாலும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் 3 ஆயிரம் முகக்கவசங்களை வாங்கி காவல் துறையினருக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பிரசன்னகுமார் கூறுகையில், "இந்த முகக்கவசம் மற்ற முகக்கவசங்களைப் போல நாற்றம் ஏற்படாது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும், இதைத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
ஊரடங்கு காரணமாக தேங்கியுள்ள வெட்டிவேரில் இருந்து மருத்துவ குணம் கொண்ட முகக்கவசங்களைத் தயாரிக்கும் இளைஞர்களின் முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.