சென்னையில் உள்ள பிலரோத் மருத்துவமனையின் 4 மேல் தளங்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துமாறு உச்ச நீதிமன்ரம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக பில்ரோத் மருத்துவமனையுடன் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற வசதிகள் குறித்த ஏற்பாடு செய்வதற்கு ஆலோசனை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனையின் 8 மாடிகளில் 5 தளங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ரம் 5 மாடிகளை இடிக்குமாறு அதிரடி உத்தரவுப் பிறப்பித்திருந்தது, ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடிப்பு உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் இந்த 5 மாடிகளை வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அப்போது அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எச்.பொலானா, மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு இன்று புதன் கிழமை விசாரணைக்கு வந்த போது வீடியோ கான்பரன்சிங்கில் நடந்த விசாரணையில் பில்ராத் மருத்துவமனையின் 4 மேல் தளங்களை கரோனா நோயாளிகளுகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மருத்துவமனைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.கே. கவுல் 150 படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் இந்த தளங்களை கோவிட்-19 நோயாளிகளுக்காகப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.
மேலும் தமிழக அரசின் 2017-ம் ஆண்டின் கட்டட முறைப்படுத்த திட்டத்தின் கீழ் இந்தத் தளை முறைப்படுத்த விண்ணப்பித்திருந்ததாக மருத்துவமனையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“இப்போதைக்கு தடையை அனுமதிக்கிறோம், ஆனால் நீங்கள் இந்த தளங்களை (4ம் மாடி முதல் 8ம் மாடி வரை), பயன்படுத்தக்கூடாது . 2009-ல் நீங்கள் 8ம் தளம் வரை விதிமீறலில் கட்டியுள்ளீர்கள், அனுமதிக்கப்பட்ட கட்டிடத் திட்டம் இல்லாமலேயே நீங்கள் பயன்படுத்தி வந்துள்ளீர்கள்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.