தமிழகம்

சிறு குற்ற வழக்குகள், போக்குவரத்து விதிமீறல்கள்: மொபைல் கோர்ட்டுக்கு அலைவதைத் தவிர்க்க மெய்நிகர் நீதிமன்றம் அறிமுகம் 

செய்திப்பிரிவு

சிறு குற்ற வழக்குகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை மொபைல் கோர்ட்டில் காத்திருந்து செலுத்துவதைத் தவிர்க்க அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்த ஏதுவாக விர்சுவல் கோர்ட் என்று சொல்லக்கூடிய மெய்நிகர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கும், பெட்டி கேஸ் என்று சொல்லக்கூடிய சிறு வழக்குகளுக்கும் போலீஸார் அபராதம் விதிக்கும் நிலையில் அந்த அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸாரிடமும், நடமாடும் நீதிமன்றங்களிலும் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு அபராதம் செலுத்த வேலை நாட்களில்தான் வரவேண்டியதாலும், நீதிமன்றங்களுக்கு வழக்குகள் அதிகமாக வருவதைக் கருத்தில் கொண்டும், ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையில் அமைந்துள்ள கணினிக் குழு எடுத்துள்ள முயற்சியின் பலனாக ‘விர்ச்சுவல் கோர்ட்’ என்று அழைக்கப்படும் இந்த முறை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நான்காவது இடமாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற இ-கமிட்டி தலைவரும், நீதிபதியுமான டி.எஸ்.சிவஞானம் மற்றும் இ-கமிட்டி உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, எம்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, சி.சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தப் புதிய நடைமுறையின்படி, காவல்துறை தரும் ‘இ-சலான்’, விதிமீறலில் ஈடுபட்டவரின் செல்போன் நம்பர், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை ‘விர்ச்சுவல் கோர்ட்ஸ்’ இணையதளத்தில் பதிவிட்டு, நீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகை குறித்த செய்தி சம்பந்தபட்ட நபருக்கு அனுப்பப்படும். அவர் தன் ‘ஆன்லைன்’ மூலம் உள்ளே நுழைந்தவுடன் தன் தவறை ஒப்புக்கொண்டால் அபராதம் செலுத்துவதுடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படும்.

ஒருவேளை தான் தவறு செய்யவில்லை என ஆட்சேபம் தெரிவிக்கும்பட்சத்தில் ஓடிபி எண் அவருக்கு அனுப்பப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு முழுமையாக விசாரிக்கப்படும்.

SCROLL FOR NEXT