தமிழகம்

எய்ட்ஸ் நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி: தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

செய்திப்பிரிவு

கோவிட்-19 காலத்தில் எய்ட்ஸ் நோயாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கோவிட்-19 நோய்த்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி அன்று காணொலிக் காட்சி மூலம் சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்சியாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமானது எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

* குறிப்பாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழ்பவர்கள் 1800 -419 -1800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உயிர் காக்கும் ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சேவை மற்றும் ஆலோசனைகளை அருகில் உள்ள ஏ.ஆர்.டி / இணைப்பு ஏ.ஆர்.டி உதவி மையங்களில் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

* மூன்றாம் நிலை கூட்டு மருந்துகள் போதிய கையிருப்பு வைக்கப்பட்டு (திருநெல்வேலி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் வேலூர்) மாவட்டங்களில் உள்ள ஏ.ஆர்.டி Plus மையங்களில் தங்கு தடையின்றி கிடைக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* 45 நாட்களில், 92 சதவீகித எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கான கூட்டு மருந்து முன்னதாகவே வழங்கப்பட்டது. எஞ்சிய நபர்களுக்கும் கூட்டு மருந்துகள் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேவைப்படும் நபர்களுக்கு ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் மூலமாக உயிர் காக்கும் கூட்டு மருந்து அவர்களின் இருப்பிடத்திலேயே வழங்கப்படுகிறது. மேலும், புலம்பெயர்ந்த நபர்களுக்கும், மற்ற மாநிலத்தவர்களுக்கும் அவர்கள் மாநிலத்திலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* 90க்கும் மேற்பட்ட அரசு ரத்த வங்கிகளின் மூலம், 28,349 தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் பதிவு செய்து அதன் மூலம் 147 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 28,340 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு கரோனா நோய் தொற்று பேரிடர் காலங்களிலும் ரத்த வங்கி சேவை தங்கு தடையின்றி பராமரிக்கப்படுகிறது.

* மாவட்ட அளவில் 900-க்கும் மேற்பட்ட ஆலோசகர்ளை, அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாடு அறைகளில் உள்ள உதவி மையங்களில் பணியமர்த்தி, பொது மற்றும் தனிமைப்படுத்தபட்ட மக்களுக்கு கோவிட்-19 பற்றிய ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்படுகின்றன.

* மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகுகள் பிற ஒத்த கருத்துள்ள சமூகம் சார்ந்த மற்றும் தன்னார்வ அமைப்புகள், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் கூட்டமைப்புகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் மற்றும் இலக்கு மக்கள் பயன் பெறும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன.

* எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுள்ள 5 நபர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டு, அவர்களில் 4 நபர்கள் பூரண குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது”.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT