சொந்த முகத் தோற்றத்தில் முகக் கவசம் அணிந்த ஆண்டோ அமல்ராஜ், மெர்வின் ஆன்றோ. 
தமிழகம்

சொந்த முகத்தோற்றத்தில் மாஸ்க் - சென்னை, குமரியில் களைகட்டும் விற்பனை

என்.சுவாமிநாதன்

சென்னையில் பல்லாவரம், சேலையூரில் இயங்கிவரும் எஸ்டிஎம் புகைப்பட ஸ்டூடியோவில் முகச்சாயல் மாஸ்க், நடிகர்களின் மாஸ்க், குழந்தைகள் மனம் கவரும் கார்ட்டூன் மாஸ்க் என விதவிதமாக விற்பனை சூடுபிடிக்கிறது. இதுகுறித்து ஸ்டூடியோ உரிமையாளர் ஆண்டோ அமல்ராஜ், இந்து தமிழ் நாளிதழிடம் கூறுகையில், ‘பொதுமுடக்கத்தால் புகைப்பட ஆர்டர்கள் ரத்தாகின. அப்போது தான் அவரவர் முகச்சாயலிலேயே மாஸ்க் செய்யும் யோசனை வந்தது.

ஒருவகையில் இந்த மாஸ்க் பொதுமுடக்கத்தால் முடங்கிய புகைப்படத்தொழிலையும் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறது. புகைப்படம் எடுத்து, மாஸ்க் செய்ய ரூ. 250 கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புகைப்படத்தை அவர்களே தந்தால் 180 கட்டணம். குழந்தைகள் கார்ட்டூன் முகக்கவசங்களையும், பெண்கள் தங்கள் சுடிதாருக்கு ஏற்ற முகக்கவசங்களையும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

நாகர்கோவிலில் போட்டோ கிப்ட் கடை உரிமையாளர் மெர்வின் ஆன்றோவும் அவரவர் முகத்தோற்றத்தில் மாஸ்க் வடிவமைத்துக் கொடுக்கிறார்.

அவர் கூறுகையில், ‘சென்னையில் இப்படியான மாஸ்க் விற்பனைக்கு வந்திருப்பது தெரிந்ததும், நானும் அதேபோல் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். ஒரு நபரின் புகைப்படத்தை எடுத்து சப்ளிமேஷன் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இந்த மாஸ்கை வடிவமைக்கிறோம். இதில் மிக முக்கியமானது, மாஸ்க் செய்ய வருவோரின் தோலின் நிறத்திலேயே இந்த மாஸ்க் இருக்கும்.

சலவை செய்து பயன்படுத்தும் வகையிலேயே இதை வடிவமைக்கிறோம். இங்கு ஒரு மாஸ்க் ரூ.80-க்கு விற்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT