கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ-வுக்குள்ள நிதியை பயன்படுத்தக் கோரி செந்தில்பாலாஜி மனு அளித்ததாகவும், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதையும்தான் சுட்டிக்காட் டியுள்ளார். முன்னாள் அமைச்சர், இந்நாள் எம்எல்ஏ என்ற முறையில்தான் செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் எண்ணத்துடன் அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தனது வாதத்தில், செந்தில்பாலாஜி மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்எல்ஏ என்ற முறையில் அவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமேயன்றி, சட்டத்துக்குப் புறம்பாக கும்பலாக வந்து, ஒரு மாவட்ட ஆட்சியருக்கே மிரட்டல் விடுக்கும் வகையில் பேசக்கூடாது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட குற்றவியல் நடுவரும் கூட. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு சட்டத்தை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.