புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் ‘515’ கணேசன் (68).பழைய இரும்பு வியாபாரியான இவர், 45 ஆண்டுகளுக்கு முன்பு ‘515’ என்ற பதிவெண்ணுடைய ஒரு பழைய காரை வாங்கி அதில் 5,600-க்கும்மேற்பட்ட சடலங்களை கட்டணமின்றி ஏற்றிச்சென்று உதவியுள்ளார். இதனால் இவர் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படுகிறார்.
இவரது சேவையை அறிந்த மனிதநேயமிக்கவர்கள் வாங்கிக் கொடுத்த மேலும் 2 கார்கள் உட்பட தற்போது 3 கார்களைக் கொண்டு சேவை செய்து வருகிறார். ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், தனது கார்கள் மூலம் உடல்நிலை சரியில்லாதவர்களை இலவசமாக ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளார். மேலும், சடலங்களையும் ஏற்றி சென்று உதவி வருகிறார்.
கட்டணமில்லாத சேவையை செய்து வருவது குறித்து ‘515’ கணேசன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
என்னிடம் உள்ள கார்கள் மூலம் சடலங்களை ஏற்றுவது, உடல்நிலை சரியில்லாதோரை மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கும் அழைத்து வருவது ஆகியவற்றை இலவசமாக செய்து வருகிறேன். தானே, ஒக்கி புயல், சென்னை மற்றும் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளேன்.
ஊரடங்கு காலத்தில் ஏராளமானோரை மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் சென்றதுடன், 8 சடலங்களை ஏற்றி சென்று உதவியுள்ளேன்.
வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் குறைவானவர்களே என்னை அழைத்து வந்த நிலையில், தற்போதைய ஊரடங்கால் ஏழை, எளியோர் மீண்டும் என்னை நாடுகின்றனர்.
எந்த இடத்திலும் என்னுடைய கார்களை யாரும் தடுத்து நிறுத்துவதில்லை. அனைவரும் வழிவிடுவார்கள். தடையின்றி ஏழைகளின் உயிர் காக்க என்னுடைய கார்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு ‘515’ கணேசன் கூறினார்.