விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதில் 4 இடங்களில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாயர்புரத்தில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 4 இடங்களில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 36 பேர் கைது செய்யப்பட்டனர்.