தமிழகம்

விமானப் பயணி ஒருவருக்கு இன்று தொற்று உறுதி; பச்சை மண்டல வாய்ப்பைப் பறிகொடுத்த கோவை!

கா.சு.வேலாயுதன்

கோவை மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் 146 பேர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 145 பேர் கரோனா தொற்று நீங்கி வீடு திரும்பினர். அதனால் 20 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் கோவையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று முதல் நாட்டில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. அந்த வகையில் கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்குமாக நான்கு விமானங்கள் ட்ரிப் அடித்தன. அந்த வகையில் கோவைக்கு 360 விமானப் பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்று சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானப் பயணிகளையும் மருத்துவக் குழுவினர் கண்காணித்து பரிசோதனை செய்தனர். அதில் 24 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலமாக கரோனா சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையான கரோனா தொற்று நீங்கிய பச்சை மண்டல மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்த கோவை மீண்டும் ஆரஞ்சு, சிவப்பு மண்டலமாக மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT