தமிழகம்

புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா ஆபத்தானது: மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

இ.ஜெகநாதன்

வரைவு நிலையில் உள்ள இந்த புதிய மின்சார திருத்தச் சட்டமே மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஒருவொருவர் வீட்டிலும் மின்சார கட்டணம் உயரப் போகிறது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தியும் புதிய மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் விருதுநகர் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. அளித்த பேட்டியில், மின்சாரத் துறையை பெரும் முதலாளிகள் கையில் கொடுப்பதற்கான மிகப் பெரிய சதி நடக்கிறது. வரைவு நிலையில் உள்ள புதிய மின்சார திருத்த சட்டமே மிகவும் ஆபத்தானதானது. ஒவ்வொருவர் வீட்டிலும் மின்சார கட்டணம் உயரப் போகிறது. இந்தியா கரோனா போன்ற காலகட்டங்களில் இருக்கும்போது மாநிலங்களின் கையில் பணத்தை கொடுக்காமல் இது போன்று தனியார் மயமாக்க துடிப்பதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

கரோனா காலத்தில் போராட்டம் நடத்துவது கரோனாவை அதிகரிக்கச் செய்யும் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து நடந்து கொள்ளவேண்டுமென அமைச்சர் மா.ப.பாண்டியராஜன் கூறியது குறித்து கேட்டபோது, ஊரடங்கின் போது அதிமுகவின் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

கரோனா காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் செய்த அளவில் பணிகளைக் கூட அமைச்சர்கள் செய்யவில்லை. அமைச்சர்கள் எங்கே என தேட வேண்டிய நிலைதான் இருக்கிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி எழுதும் கடிதத்திற்கு பிரதமர் மோடி எந்தவிதமான அங்கீகாரமும் அளிக்கப் போவதில்லை. தமிழக அரசு கடன் வாங்குவதற்கான உத்தரவாதமாக இந்தச் சட்டங்களில் கையெழுத்திட வேண்டுமென மத்திய அரசு நிர்ப்பந்திக்கின்றது.

நீட் சட்டத்தை ஏற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் தமிழக அரசு புதிய மின்சார சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளும். தேவைப்பட்டால் புதிய மின்சார திருத்த சட்டத்தை எரிக்கவும் தயங்கக்கூடாது. இது சாமானிய மக்களின் வாழ்வில் மிகப் பெரும் ஆபத்தான விசயத்தை உருவாக்கும் என்றார்.

SCROLL FOR NEXT