தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது தேமுதிகவுக்கான மொபைல் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டது.
சென்னையில் உள்ள எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர் களுக்கு விஜயகாந்த் நிதியுதவி வழங்கினார். மேலும் 1000 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான இலவச ஆயுள் காப்பீடுகளை வழங்கினார்.
பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறோம். அதன்படி, ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்று ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
இந்நிலையில் 2012-ம் ஆண் டைப் போலவே இந்த ஆண்டும் ‘மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் மாவட்டந்தோறும் தலா ரூ.20 லட்சம் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளேன்.
லஞ்சம், ஊழல், வறுமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவதூறு வழக்குகளையும் சந்தித்து வருகிறோம். எனினும், சோதனைகளை சாதனையாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான தருணம் வந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, வறுமை, விலைவாசி உயர்வு என தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்காக தேமுதிக உறுதியோடு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். தேமுதிகவை தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக ஆக்கிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.