தமிழகம்

தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் அபராதத்தை ஆன்லைனில் செலுத்த ‘மெய்நிகர் நீதிமன்றம்’- நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று தொடங்கி வைக்கிறார்

ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் முதன்முறையாக போக்குவரத்து விதிகளை மீறுவோர் அதற்கான அபராதத்தை இ-சலான் மூலமாக ஆன்லைனில் செலுத்தும் வகையில் மெய்நிகர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூரட் இன்று தொடங்கி வைக்கிறார்.

நவீன டிஜிட்டல் யுகத்துக்கேற்ப நீதிமன்றங்களின் அன்றாட பணிகளிலும் புதுப்புது மாற்றங் கள் கொண்டு வரப்படுகின்றன. கரோனா ஊரடங்கு காலகட்டங் களில் காணொலி மூலமாக அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஏற்கெனவே டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வசதி ஏற்படுத்தும் வகையில் விர்ச்சூவல் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றங்களை தொடங்க உத்தரவிட்டார். அதன் அடுத்தகட்டமாக தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் மெய்நிகர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் டெல்லியில் இருந்து இன்று காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார். இன்று (மே 26) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் உயர் நீதிமன்ற இ-கமிட்டி தலைவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் இ-கமிட்டி உறுப்பினர்களான நீதிபதி கள் புஷ்பா சத்யநாராயணா, எம்.சுந்தர், ஏ.டி.ஜெகதீ்ஷ்சந்திரா, சி.சரவணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த மெய்நிகர் நீதிமன்றங்கள் குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன் கூறும்போது, “தற்போது இந்த மெய்நிகர் நீதிமன்றங்கள் மூல மாக போக்குவரத்து போலீஸார் விதிக்கும் அபராதம் இ-சலான் மூலமாக குற்றவியல் நடுவருக்கு டிஜிட்டல் வடிவில் செல்லும். குற்றவியல் நடுவர் அபராத தொகையை நிர்ணயம் செய்து அதற்கான இ-சலானை சம்பந்தப் பட்ட வாகன ஓட்டியின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வடிவில் அனுப்பிவைப்பார்.

அதன்மூலமாக போக்கு வரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டி எளிதாக ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்தி விடுவார்” என்றார்.

SCROLL FOR NEXT