தமிழகம்

ஊரடங்கால் சுப நிகழ்ச்சிகள் ரத்து; திருமழிசை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி- கீழே கொட்டப்படும் காய்கறிகள்

செய்திப்பிரிவு

திருமழிசை சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், விற்பனையாகாத காய்கறிகளை கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் திருமண விழாக்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அறவே இல்லை.விருந்துகள், கோடைகால திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், கோடை விடுமுறை, விசேஷ கால தேவையை கருத்தில் கொண்டு காய்கறிகள் பயிரிடப்பட்டு, உற்பத்தி வழக்கமான அளவிலேயே உள்ளது.

காய்கறி வரத்து அதிகரிப்பு, தேவை குறைவு காரணமாக பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று திருமழிசை சந்தையில் தக்காளி கிலோ ரூ.6, கேரட் ரூ.8, முள்ளங்கி, புடலங்காய், முட்டைக்கோஸ் தலா ரூ.10 என விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. பல காய்கறிகள் விற்பனை ஆகாததாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் அவற்றை விவசாயிகள் அங்கேயே கொட்டிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி வாடகை கூட வரவில்லை என்று கூறி விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

குளிர்பதனக் கிடங்குகள்

இது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறும்போது, "வரத்து அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும்,கோயம்பேடு சந்தையில் இருப்பு வைக்க குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. தற்போது சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டதால், வியாபாரிகள் வரத்து குறைந்து, விற்பனையும் குறைந்து, விலையும் குறைந்துவிட்டது. அதனாலேயே விவசாயிகள் காய்கறிகளை கீழே கொட்டிவிட்டு செல்கின்றனர்" என்றனர்.

SCROLL FOR NEXT