பென்னாகரம் பகுதியில் அழிவை சந்தித்து வரும் வரலாற்றுச் சின்னங்களை பாதுக்காக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தாளப்பள்ளம் அருகேயுள்ள வனப் பகுதியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் கள் வசித்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் வாழ்ந்தவர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள் ளது. அவை தற்போது சிலரால் அழிவை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து, தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களான சுப்பிரமணியன், ராசன், அர்ச்சுனன் ஆகியோர் கூறிய தாவது:
பென்னாகரம் வட்டம் தாளப்பள்ளம் அருகே போகியம், புதுகாடு என்ற ஊர்கள் இருந்துள் ளது. காலப்போக்கில் அந்த ஊர்கள் காணாமல் அழிந்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வசிக்கும் மக்களின் உதவியுடன் அப்பகுதியில் கள ஆய்வு மேற் கொண்டோம். ஆய்வில், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி யில் மனித இனம் வசித்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
வாழ்விடமான ஊர் இருக்கை பகுதி, இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஈமச்சின்னங்கள் உள்ள பகுதி ஆகியவற்றை தனித்தனியாக பார்க்க முடிகிறது. ஈமச்சின்னங்கள் அப்பகுதி மக்களால் பாண்டவர் குழி என அழைக்கப்படுகிறது. மாண்டவர்களை அடக்கம் செய்த குழி தான் மருவி பாண்டவர் குழி என மாறியுள்ளது. சடலத்தை புதைத்து அதன்மேல் சிறு கற்களை குவித்து கற்குவியல் ஏற்படுத்தியுள்ளனர்.
பூமியில் கல்லறை அமைத்து அதன்மேல் சிறு கற்களை குவித்து சுற்றிலும் சட்ட வடிவத்தில் பெரிய கற்களை வைத்துள்ளது மற்றொரு வகை ஆகும். இது கல்வட்டம் என்று அழைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடலை தாழியில் வைத்து அடக்கம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கே உள்ளது. இப்பகுதியில் இதுபோன்று சுமார் 500 ஈமச்சின்னங்கள் காணப் படுகிறது. மேலும், இதே பகுதியில் ஓரிடத்தில் இரும்பு தாதுவை உருக்கி இரும்பு பிரித்து எடுத்து கருவிகள் செய்த பகுதி ஒன்றும் உள்ளது. அந்த இடத்தில், இரும்பை உருக்கியபோது எஞ்சிய கசடுகளை இன்றும் பார்க்க முடிகிறது. இரும்பை உருக்கிய உலைகளும் கிடைத்துள்ளது. 15 கிணறுகள், வீட்டின் அடித்தளம், கோயில்கள் ஆகியவையும் உள்ளது.
தாளப்பள்ளம் ஓடையின் கரையில் இந்த ஊர்கள் அன்று நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காலரா நோய்க்கு பலர் பலியானபோது அங்கு வசித்தவர் கள் ஊரை காலி செய்ததாக செவிவழி தகவல்கள் கூறுகிறது.
இந்நிலையில், புதையல் தேடும் கும்பல் இப்பகுதியில் உள்ள ஈமச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை தற்போது குறிவைத்து அழித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து நம் மூதாதையர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்று சின்னங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதையல் வேட்டை கும்பலுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.