சென்னையில் இன்று அதிகபட்சமாக 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் 548 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில், இன்று 549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தமாக, 11 ஆயிரத்து 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் மொத்தமாக 5,135 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5,911 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பதிவான கரோனா உயிரிழப்புகளில் 7 பேரில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
அதுகுறித்த விவரம்:
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது ஆண், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு கரோனா இருந்தது 24-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது ஆண், நேற்று கரோனாவால் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயது ஆண் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே காசநோய் இருந்துள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட68 வயது ஆண், இன்று கரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 75 வயது ஆண், நேற்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயதுப் பெண் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார்.