பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மதுரை வைகை அணையில் 'சாமி'க்கு வைத்திருந்த தண்ணீர் குடிநீருக்காக திறப்பு:  5 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் வைத்திருந்த தண்ணீர், இன்று மாலை குடிநீருக்காக திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்கள் பயன்பெறுவார்கள்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு வைகை அணை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது வைகை அணையில் 41.88 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட நீர் வரத்து இல்லை.

அதனால், ஆண்டிபட்டி, மதுரை மாநகராட்சி, வடுகப்பட்டி, தேனி அல்லி நகரம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே தினமும் 72 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் நீர் வரத்து வழித்தடங்கள் பாளம் பாளமாக பிளவுபட்டு காய்ந்து கிடக்கிறது. கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்ட வைகை ஆற்றங்கரையோர குடிநீர் ஆதாரங்கள், நிலத்தடி நீர்மட்டமும் வறட்சிக்கு இலக்காகி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், இன்று (மே 25) மாலை 6 மணியளவில் வைகை அணையில் இருந்து இந்த 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதுகுறித்து பெரியார் வடிநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி கூறுகையில், "வைகை அணையில் குடிநீர் தேவைக்குப் போக சித்திரைத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக 216 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைப்போம். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நடக்காததால் சாமிக்காக வைத்திருந்த தண்ணீர் மீதமிருந்தது.

அந்த தண்ணீரை 3 நாளைக்கு திறந்துவிட்டுள்ளோம். நேற்று 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் 350 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வரை செல்லும். இந்த தண்ணீரை திறந்துவிட்டாலும் வைகை அணையில் போதுமான இருப்பு உள்ளதால் ஆண்டிப்பட்டி, மதுரை மாநகராட்சி, தேனி அல்லி நகரம், வடுகப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

SCROLL FOR NEXT