தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை: வெறிச்சோடிய மசூதிகள்

அசோக்குமார்

முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகை நாளில் மசூதிகள், ஈத்கா மைதானங்களில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு அரசு தலைமை காஜி அறிவுறுத்தினார்.

அதன்படி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வீராணம், பொட்டல்புதூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் அவரவர் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ரம்ஜான் தொழுகையை நடத்தினர். இதனால் பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தொழுகை முடித்தவுடன் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், கை கொடுத்தும் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளியோர் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வீடுகளுக்கு நேரில் சென்று ஃபித்ரா அரிசி வழங்கினர். புளியங்குடியில் தமுமுக சார்பில் ஏழை மக்கள் சுமார் 300 பேருக்கு பிரியாணி அரிசி, மாட்டிறைச்சி வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT