தமிழகம்

ஊரடங்கால் மூடப்பட்ட மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம்: மே 26 முதல் செயல்படும்

கி.மகாராஜன்

கரோனா ஊரடங்கால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் மே 26 முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கிக் கடன் தொடர்பான வழக்குகள், சொத்து விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் சென்னை, மதுரை, கோவையில் உள்ளன. மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் புதுக்கோட்டை தவிர்த்து 13 மாவட்டங்களின் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து கடன் வசூல் தீர்ப்பாயத்தின் பணிகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் மே 26 முதல் செயல்படத் தொடங்கும் என பதிவாளர் டி.ஏ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் மே 26 முதல் செயல்படத் தொடங்கும். தீர்ப்பாயத்துக்கு வருவோர் கட்டாயம் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். உடல் வெப்ப அளவு 38.0 டிகிரி செல்சியஸ் அல்லது 100.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே தீர்ப்பாயத்துக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 6 அடி தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். தீர்ப்பாய வளாகத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது.

புதிய வழக்குகளைத் தாக்கல் செய்வதற்காக பதிவுத் துறை கவுன்ட்டர் மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை திறந்திருக்கும். ஒரு நாளில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 30 மனுக்கள் மட்டுமே பெறப்படும். மனுத் தாக்கல் செய்யும் வரிசையில் 4 பேருக்கு மேல் நிற்கக்கூடாது. புதிதாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மறுநாள் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்''.

இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT