பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

இன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து

அ.வேலுச்சாமி

திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து கடந்த 60 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இன்று முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. பயணிகளும் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக திருச்சி - சென்னை இடையேயான விமான சேவை மே 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மே 31-ம் தேதி வரை விமானங்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT