தமிழகம்

கரோனா ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த புத்தக விற்பனையாளரான இம்மானுவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்தியாவில் மார்ச் 24-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மார்ச் 31-ம் தேதி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பலர் வருவாய் இழந்துள்ள நிலையில், தன்னைப் போல குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளனர்.

சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்த நிலையில், தென்கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளது. கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை அது நம்முடன்தான் இருக்கும் என்பதால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கடைப்பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

அதனால் ஊரடங்கை நீட்டித்து மே 17-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

          
SCROLL FOR NEXT