திருமங்கலத்தில் நடந்த ஜெ. பேரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்பி. உதயகுமார் 
தமிழகம்

வேதா நிலையம் வருங்கால தலைமுறையினருக்கு வாசிப்பு இல்லமாக மாறும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.சன்னாசி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான ‘ வேதா நிலையம் ’ வருங்கால தலைமுறையினருக்கு வாசிப்பு இல்லமாக மாறும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முதல்வர் கே. பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து ஜெயலலிதா இல்லம், அவரது அசையும் சொத்துக்களை தற்காலிகமாக அரசுடைமையாக்கி, வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு,ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.

இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் 2-வது நாளாக நடந்த ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.

தீர்மானங்கள் விவரம்:

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை, உலகமே பூஜித்து மகிழ்ந்திடும் வகையில் நினைவு இல்லமாக மாற்றும் முதல்வரின் நடவடிக்கையால் ஜெயலலிதாவின் சாதனை, தியாகத்தை பொது மக்களும், இளைய சமூதாயமும் அறியச் செய்தமைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

இது ஜெயலலிதாவின் புகழை ,மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அழியாப்புகழை உருவாக்கும். இதற்கு முதல்வருக்கும், அவருக்கு உறுதுணையாக செயல்படும் துணை முதல்வருக்கும் பேரவை சார்பில், நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

வேதா இல்லத்தை உலக தமிழர்கள் பார்க்கும் வகையில், வெற்றித் திருமகள் நினைவிடமாக்கிய முதல்வருக்கு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் சார்பில் வணங்குகிறோம்.

வரலாற்றை படித்தவர்களுக்கு மத்தியில், வரலாறு படைத்த தமிழகத்தில் அகில இந்தியளவில் முன்னேறிய முதன்மை மாநிலமாக்க ஆயுளை அர்ப்பணித்தார் ஜெயலலிதார். அவரது புகழ் பொக்கிஷமாகவும், வருங்கால தலைமுறையினர் வாசிக்கும் படிப்பகமாகவும் இந்த இல்லம் மாறும்.

முதல்வரின் இந்த நடவடிக்கை, ஜெயலலிதாவுக்கு அழியாத புகழை பெற்றுத்தரும். அதிமுக தொண்டர்கள், தமிழர்கள் இந்த அரசை என்னாளும் கொண்டாடி மகிழ்வார்கள். என்றைக்கும் நன்றி மறவாமல் தமிழக மக்கள் தேர்தலில் வெற்றியை முதல்வருக்கு வழங்கவேண்டும். இதற்காக தொண்டர்களும், நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்றுவோம் என, பேரவை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT