கோவில்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வாழைகள், காய்கறி பந்தல் ஆகியவை சாய்ந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மதியத்துக்குப்பின்னர் குளிர்ந்த காற்றும், சாரலுமாகவும் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து சிறிது நேரம் மழையும் பெய்தது.
இந்த சூறைக்காற்றில், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள லட்சுமிபுரத்தில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குலைதள்ளிய நிலையில் இருந்த 400 வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதே போல், இளையரசனேந்தல் அருகே லட்சுமியம்மாள்புரத்தில் விவசாயி ராஜாராம் என்பவர் தோட்டக்கலைத்துறை மானியத்தில் ஒரு ஏக்கரில் காய்கறி பந்தல் அமைத்திருந்தார்.
இதில், சுரைக்காய், பாவைக்காய், புடலைங்காய் ஆகியவை பயிரிட்டிருந்தார். சூறைக்காற்றில் காய்கறி பந்தல் முற்றிலும் சேதமடைந்து, அதிலிருந்த காய்கறிகளும் மண்ணில் விழுந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
மேலும், வெங்கடாசலபுரத்தில் சூறைக்காற்றுக்கு ஒரு சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.