தமிழகம்

இந்தியாவின் அதிக தொற்றுள்ள 11 மாநகராட்சிகளில் 3-ம் இடம் பிடித்துள்ள சென்னை: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை 

மு.அப்துல் முத்தலீஃப்

கரோனா பாதிப்பில் இந்தியாவில் 70 சதவீதத் தொற்றுள்ளவர்களைக் கொண்டுள்ள 7 மாநிலங்கள், 11 மாநகராட்சிகளில் சென்னை 3-வது இடத்தில் உள்ளதால் அடுத்துவரும் 2 மாதங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் மொத்த எண்ணிக்கைக்கு இணையாக சென்னையின் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையின் தொற்று எண்ணிக்கைக்குச் சவாலாக தற்போது வெளிமாநிலங்களிலிருந்து சென்னை திரும்புவோர் காரணியாக அமைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்த வேளையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மார்ச் 24-க்குப் பிறகு கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திரையரங்குகள், பெரிய ஷாப்பிங் மால்கள், மெட்ரோ ரயில், மின்சார ரயில், பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் சென்னை முதன்மையானது. தமிழகத்தின் முதல் கரோனா நோயாளி ஓமனிலிருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரம் நபர். பின்னர் சில நாளில் உ.பி. இளைஞர் ரயில் மூலம் சென்னை திரும்ப அவருக்கும் தொற்று ஏற்பட்டது உறுதியானது.

சென்னையில் தொற்று எண்ணிக்கை 10, 20 என இருக்க தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லா நிலை இருந்தது. இந்நிலையில் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்களால் சென்னையில் 10 என்கிற எண்ணிக்கை 50, 100 ஆக பெருக ஒரு கட்டத்தில் டெல்லியிலிருந்து திரும்பியோரால் சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனாலும் அதுவும் ஒருகட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், ஏப்ரல் 24 அன்று கோயம்பேடு சந்தையில் திரண்ட பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்களிடையே பரவிய தொற்றால் சென்னையின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் எகிறியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம், கரோனா குறித்த புரிதல் இல்லாமல் அத்தியாவசியத் தேவைக்காக இல்லாமல் வழக்கமான காலம்போல் வெளியில் சுற்றியதும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது.

கோயம்பேடு மொத்தப் பரவல் சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களையும் பெரிய அளவில் பாதித்தது. சென்னையில் பெரும்பரவலுக்கு கோயம்பேடு சந்தை காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. சென்னை மட்டுமல்லாமல் வடமாவட்டங்களிலும் மூன்று இலக்க எண்களில் தொற்று அதிகரித்தது.

தற்போது சென்னையின் எண்ணிக்கை நேற்றைய கணக்குப்படி 9,989 ஆகும். இது தமிழகத்தின் மொத்த எண்ணிக்கையான 15,512-ல் 64.39 சதவீதம் ஆகும். அதாவது மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சென்னையின் மொத்த எண்ணிக்கை மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கையின் கூட்டுத்தொகையைவிட பல மடங்கு அதிகம். மற்ற மாவட்டங்களின் மொத்த கூட்டுத்தொகை சதவிதம் 35.61 ஆகும்.

சென்னையில் 15 மண்டலங்களில் 594 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. சென்னையின் முக்கியமான நெரிசல் மிகுந்த மண்டலம் 5 ராயபுரம் 2,000 எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. அடுத்து கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை என வரிசை கட்டி நிற்கிறது.

சென்னையின் இவ்வாறான பாதிப்புக்கு முக்கியக் காரணம் நெரிசல் மிக்க மக்கள்தொகை, குறுகிய பகுதிகளில் வாழ்வது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கோயம்பேடு பரவலுக்குப் பின் சென்னையின் குடிசைப் பகுதிகளில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே குடிசைப் பகுதிகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறது சென்னை மாநகராட்சி.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 மண்டலங்களில் ஆயிரக்கணக்கில் தொற்றுள்ளவர்கள் உள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் மகாராஷ்டிராவின் மும்பையில் 28,817 [பேர், குஜராத்தின் அஹமதாபாத் நகரத்தில்10,001 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது. 9,989 பேர் சென்னயில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து மகாராஷ்டிராவின் தானே 6,130, புனே 5,347, ம.பியின் இந்தூர் 2,933 என உள்ளது.

அடுத்தடுத்து கொல்கொத்த 1,613 , ஹைதராபாத் 1,124, பெங்களூரு 267, ஆக்ரா 842, லக்னோ 325, பாட்னா196, ஜெய்ப்பூர் 1,755, ம.பி. காசர்கோடு 216 எனப் பல நகரங்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நிலையில் சென்னையின் மொத்த எண்ணிக்கை பல மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம் இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனாலும், தொற்று பாதிக்கப்பட்ட 9,989 என்கிற எண்ணிக்கையில் தமிழகத்தில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,043 என்கிற அளவில் 40.47 சதவீதமாக இருப்பது ஆறுதலான ஒன்று. ஆனால் மரண விகிதம் தமிழக அளவில் 103 ஆக உள்ளது. இது மொத்த சதவீதத்தில் .70 சதவீதம் ஆகும். இதுவும் மிக ஆறுதலான விஷயம். மொத்த மரண விகிதத்தில் 103 பேரில் சென்னையில் மட்டும் 71 பேர் உயிரிழப்பு என்பது 68 சதவீதமாக உள்ளது.

அதேபோன்று சென்னையின் மொத்த எண்ணிக்கையான 9,989ல் மரண எண்ணிக்கை 71 ஆக உள்ளது. இது மாநில சதவீதத்தை ஒட்டியே .71 சதவீதம் என்கிற அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொற்றைக் கட்டுப்படுத்தி எழவே இல்லை என்கிறபோது தற்போது ரயில், விமானப் போக்குவரத்து மூலம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளால் தினசரி தொற்று எண்ணிக்கை 80, 90 என்கிற அளவில் அதிகரிக்கிறது.

இது வரும் நாட்களில் கூடும். தற்போது மத்திய சுகாதாரத்துறை சில தகவல்களை அளித்துள்ளது. அதில் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்கள், 11 மாநகராட்சிகளில் உள்ள மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் ஆகும். அதிகம் உள்ள மேற்கண்ட 11 மாநகராட்சிகளில் அடுத்துவரும் 2 மாதங்களில் தேவையான சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அர்த்தம் அடுத்துவரும் 2 மாதங்களில் கரோனாவின் வீச்சு அதிகம் இருக்கும் என மத்திய சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது. இந்நிலையில் அதில் உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று என்கிற நிலையில் சென்னையின் குடிசைப் பகுதிகளில் ஏற்கெனவே சென்னை மாநகராட்சியினர் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளபடி அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான கூடுதல் நடவடிக்கை, வீடு வீடாகப் பரிசோதனை, பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குச் செல்வது மிக முக்கியம்.

SCROLL FOR NEXT