ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஏழை மக்களின் 150 குடும்பங்களுக்கு அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள், பேராசிரியர்கள் எனப் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர் ஜெகதீசன் தன்னிடம் படிக்கும் மாணவர்கள், ஏற்கெனவே படித்த மாணவர்கள் மற்றும் புதுச்சேரி, தமிழகப் பகுதியில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்து வருகிறார்.
இதுவரை சுமார் 150 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து தமிழாசிரியர் ஜெகதீசன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை மக்கள் பெரிய அளவில் பாதித்துள்ளனர்.
அவர்கள் பசியைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, என்னுடைய சொந்தப் பணத்தில் முதற்கட்டமாக 50 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினேன். என்னுடைய இந்தச் செயலை வாட்ஸ் அப் மூலம் பார்த்து என்னுடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள் சிலர் உதவி புரிந்தனர்.
அதனைக் கொண்டும், என்னுடைய பணத்தைச் சேர்த்தும் ஏழைக் குடும்பங்களுக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றேன். புதுச்சேரியில் முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு, தவளக்குப்பம், நல்லவாடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் மொரட்டாண்டி, மானூர், ஆத்தூர், காலூர் ஆகிய பகுதிகளில் குடிசைகளில் வசித்து வரும் ஏழை மக்களுக்கும் வழங்கினேன்.
அதுமட்டுமின்றி 26 குடும்பங்களுக்கு வீட்டு வாடகை செலுத்த தலா ரூ.2,000 ரொக்கப் பணம் வழங்கியுள்ளேன். தற்போது வரை 150 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளேன். இந்தச் சேவை எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. தொடர்ந்து உதவி புரிவேன்’’என்றார்.