கேரள மாநிலத்தை முன்னோடியாக மாற்றியுள்ளார் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலை கேரள மாநிலம் கையாண்ட விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். மேலும், கேரள முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
இதனிடையே இன்று (மே 24) கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"அப்போது, ரத்தம் தோய்ந்த ஒரு சட்டையுடன் பேசியதன் மூலம் அவர் ஒரு புயலை உருவாக்கினார். இப்போது, தனது மாநிலத்தை நாட்டிலேயே முன்னோடியாக மாற்றியுள்ளார். கேரள முதல்வர் நம்முடனான பிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்மை சகோதரர்களாக விளித்து, எல்லைகளைத் திறந்துள்ளார். பினராயி விஜயன் தோழருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.