ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் , ஊழியர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டது. அதன் பிறகு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கடைகளில் இருந்த மதுபானங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கோடிக்கணக்கான மதிப்பிலான மது பாட்டில்கள் முறைகேடாக விற்கப்பட்டன. இதில் கிடைத்த வருவாய் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்தது. இந்த சட்டவிரோத மது விற்பனையில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு, கணக்கில் வராத அந்தப் பணத்தை, ‘ஆப்டர் சேல்ஸ்’என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களில் பலர் அரசிடம் செலுத்தினர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக
விற்பனையான மதுபாட்டில்களுக்கு உரிய தொகை தவிர, அந்தத் தொகைக்கு 50 சதவிகித அபராதமும், 24 சதவீத வட்டியும் அத்துடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் என்றால், அந்த ஒரு லட்சம் ரூபாய் போக, கூடுதலாக ரூ.50,000 அபராதமும், 24 சதவீத வட்டியும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் தொ.மு.ச மாநிலத்தலைவர் ஆ.ராசவேல் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், ''இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கொடுக்க பணியாளர்களுக்கு முறையாக விளக்கம் கேட்கும் குறிப்பாணை ஏதும் வழங்காமல் நேரடியாக தண்டனை வழங்குவது இயற்கை நியதிக்கு (AGENT OF NATURE JUSTICE) எதிரானது. மாத ஊதியமாக 12000 ரூபாய்க்கும் குறைவாக பெற்று வரக்கூடிய இவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி வருவது தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே இதனை தாங்கள் மாறிய பரிசீலனை செய்திட வேண்டும். பணியாளர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு, அவர்கள் தங்களின் நியாயத்தை எடுத்துரைக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீது தொழிற்சங்க சட்டம், தொழிலாளர் நல சட்டத்தின்படி மேல் நடவடிக்கை மேற்கொள்வது நியாயமானதாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.