கரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி யில் மே 20 முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பினர். கோவிட் வரி விதிக்கப்படாதது, குறிப்பிட்ட சதவீதம் விதிக்க வேண்டும் என பல காரணங்களைக் குறிப்பிட்டு கோப்பு 3 முறை திருப்பி அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆளு நர் கிரண்பேடி கூறிய திருத்தங்களுடன் மீண்டும் நேற்று முன்தினம் கோப்பு சென்றது. இதனால், மதுக்கடைகளைத் திறக்க ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது 25-ஐ எட்டியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் மது பானக் கடைகளைத் திறக்க அனுமதி கோரும் கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை என்று அரசு வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இதனால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நிலவுகிறது.