செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே பழம்பெரும் நடிகை வாணியின் மகனும் கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருமான வெங்கடேஷ் கார்த்தி(32) நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு அருகே உள்ளது ஆனூர் கிராமம். இந்த கிராமத்தில் 1800-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழைய வீடு உள்ளது. இது பழம்பெரும் நடிகை வாணியின் பூர்வீக குடியிருப்பு. இந்த குடியிருப்பு பகுதிக்கு வாணி மற்றும் அவரது கணவர் கருணாகரன், அவரது மகன் வெங்கடேஷ் கார்த்தி ஆகியோர் அடிக்கடி வந்து செல்வர். வெங்கடேஷ் கார்த்திக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 2 மாதங்களாக சென்னைக்கு வர முடியாமல் பெங்களூருவிலேயே இருந்தார். இவரது தந்தை கருணாகரன் பெங்களூரு சென்று கார்த்தியை அழைத்து வந்தார். இருவரும் கடந்த 6-ம் தேதி ஆனூரில் பங்களா வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். வந்ததில் இருந்து வெங்கடேஷ் கார்த்தி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் பின்பக்கம் உள்ள தாழ்வாரத்தில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தைகருணாகரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருக்கழுக்குன்றம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சடலத்தை கைப்பற்றிவிசாரித்து வருகின்றனர்.
வெங்கடேஷ் கார்த்தி இங்கு வரும்போது அந்தப்பகுதி மக்களுக்கு அடிக்கடி இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.