ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தொடர்ச்சியாக 19 நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தை வாபஸ் பெற்று வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் ஏராளமான திருக்கை மீன்களுடன் கரை திரும்பினர்.
இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் யானைத் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத்திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத்திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட 10க்கும் அதிகமான திருக்கை வகை மீன்கள் உள்ளன. இவை அதிகப் பட்சமாக 150 கிலோ வரையிலும் வளரக் கூடியது.
தற்போது ராமேசுவரம் தீவு கடற்பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் இனப் பெருக்கத்திற்காக திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
வேலை நிறுத்தத்திற்கு முன் கிலோ 100 ரூபாய்க்கு விற்ற திருக்கை மீன்கள் தற்போது அதிகப்பட்சம் ரூ. 80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததும் பாம்பன் திருக்கை மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும், என்றனர் நம்பிக்கையுடன்.
(பாம்பன் பாலத்தின் கீழ் மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டுச் செல்லப்படும் திருக்கை மீன்கள்
படம்: எஸ்.முஹம்மது ராஃபி)
பாம்பன் மீனவர் வலையில் சிக்கி அரிய வகை வீணைத் திருக்கை
பாம்பன் தென் கடல் பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் பல வகை மீன்களுடன் 30 கிலோ எடை கொண்ட அரிய வகை வீணைத் திருக்கை மீன் ஒன்றும் சிக்கியது.
திருக்கை மீன்களின் குடும்பத்தைச் சார்ந்த இந்த மீன் இசைக் கருவியை ஒத்த தோற்றம் கொண்டிருப்பதால், இவை வீணை திருக்கை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கிடார் பிஸ் (guitar fishes) என்றும் அழைக்கப்படுகிறது.
கூரிய முகப்பகுதியையும், தட்டையான உடலமைப்பையும் கொண்ட வீணை திருக்கை மீனின் கண்கள் இரண்டும் பக்கவாட்டில் அமைந்திராமல் உடலின் மேற்புறத்தில் அமைந்திருக்கும் கின்றன. நீரின் அடிமட்டத்தரையில் வாழ்வதற்கேற்ற உடலமைப்புக் கொண்ட இம்மீன்கள் பழுப்பு நிறத்தை கொண்டிருக்கும். எதிரி மீன்களை மண்ணில் புதையுண்டு தாக்கி அழிக்கும் வல்லமையும் இதற்கு உண்டு.