‘‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும், ’’ என்று மாநகராட்சி அந்நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை கட்டுப்பாடுகளோடு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்களில் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் வைத்திருப்பதுடன், கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி மதுரை மாநகராட்சியின் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.