தமிழகம்

ஆந்திரா திட்டத்தைப் போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்கு நேரடியாக நிதி வழங்குக: அரசுக்கு ஆறுபாதி ப.கல்யாணம் கோரிக்கை

கரு.முத்து

அண்டை மாநிலமான ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டு வரும் 'ரயத்துபந்து' திட்டம் போல தமிழகத்திலும் ஒரு ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு 5000 ரூபாய் வீதம் இரண்டு பருவத்திற்கு 10,000 ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கை பின்வருமாறு:
‘நடப்பு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடப் பட்டிருப்பதற்கு விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீர்ப்பாசனத்தைச் சிறப்பாக ஒழுங்குபடுத்த வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, வேளாண் துறை, விவசாயப் பிரதிநிதிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

டெல்டா பகுதியில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளில், பயன்பெறும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழுவின் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டும். கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை 15 தினங்களுக்கு ஒருமுறை நடத்துவது மிகவும் அவசியமானது. இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வகை செய்ய வேண்டும்.

டெல்டா பகுதியில் நிலத்தடி நீர்ப் பாசனத்தை நம்பி சாகுபடி அதிகம் நடைபெறுவதால் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்குவது பெரிதும் விவசாயிகளை பாதுகாக்கும். இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் திட்டங்களை முக்கியப்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகள் வங்கி கடன் பெறுவதில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் அவற்றைக் களைந்து, கடன் கிடைப்பதைச் சுலபமாக்க வேண்டும்.

தமிழக அரசு, சென்ற ஆண்டு நிறுத்தப்பட்டசிறப்பு குறுவை, சம்பா தொகுப்பு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டு வரும் 'ரயத்துபந்து' திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு 5000 ரூபாய் வீதம் இரண்டு பருவத்திற்கு 10,000 பத்தாயிரம் ரூபாய் என ஏக்கர் உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழகத்திலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.’
இவ்வாறு ஆறுபாதி ப. கல்யாணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT