கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கால் தொழில் இன்றி தவித்த பிற மாநிலங்களை சேர்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 957 பேர் பிஹாருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
2-ம் கட்டமாக ராஜஸ்தான், ஜார்கண்ட்டிற்கும் தொழிலாளர்கள் ரயிலில் குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் வேலை செய்து வந்த மஹராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களை மும்பைக்கு அனுப்பி அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கான மதுரையில் சிறப்பு ரயில் மூலம் மும்பையை சேர்ந்தவர்கள் செல்வதற்கு பல மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மஹராஷ்டிராவை சேர்ந்த 36 பேர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் வழியனுப்பி வைத்தார்.