தமிழகம்

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து தங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மே 29 வரை எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசியதாக புகாரின்பேரில் இன்று ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இதேபோன்று வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் இருவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி. ஆர் பாலு உள்ளிட்ட எம்பிக்கள் குழு திமுவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாக தெரிவித்து பேட்டி அளித்தனர். அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனக்கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பின்னர் தயாநிதிமாறன் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளனர்.

இருவரது மனுக்களும் நீதிபதி எம். நிர்மல்குமார் முன் இன்று மாலை காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் தரப்பில் “இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவரும் அனுமன் சேனா அமைப்பை சேர்ந்தவர் என்பதால் அரசியல் உள்நோக்குடன் புகார் அளித்துள்ளார்.

ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை கோரிதான் தலைமை செயலாளரை சந்தித்தோம். ஆனால் அவரோ எங்கள் கோரிக்கைகள் மீது மதிப்பளிக்கவோ அல்லது எங்களை முறையாக நடத்தவோ இல்லை. அதனால் சபாநாயகரை சந்தித்து முறையிட்டோம். தலைமை செயலாலரின் அறவுறுத்தலின்படியே எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது”. என தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நடராஜன் தன்னுடைய வாதத்தில், “தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் நடந்து பேசியுள்ளதால் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவே இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்”. என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், கோவையில் பதிவான வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். வழக்கில் எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT