தூத்துக்குடியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று வந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் 144 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 4 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு பரிசோதனைக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஸ்கேன் சென்டரை மாநகராட்சு சுகாதார அலுவலர்கள் இன்று மூடினர். அந்த சென்டர் முழுவதும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
மேலும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதுடன், அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.