கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. சமூக பரவல் நிலை இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் அதிகம் தொற்று பரவுகிறது ஆனாலும் அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் நாங்கள் தவறிவிட்டோமாம். விமர்சனம் வைக்கிறார்கள். இந்தியாவிலேயே பரிசோதனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. வெளி மாநிலத்திலிருந்து ஒரு வயதான அம்மா சொன்னதாக செய்தி படித்தேன்.
தமிழகம் வந்தவுடன் எங்களை அதிகாரிகள் அழைத்துச் சென்று அருமையான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி செய்து கொடுத்தார்கள் என பாராட்டி உள்ளார். இவ்வாறு தான் நோயுற்றவர்களுக்கான அனைத்து சிகிச்சைகளையும் உரிய வசதியுடன் செய்துகொடுக்கிறோம்.
நோய் வருவது யாருக்கு என்பது தெரியாது பத்திரிகயாளர்களுக்குக்கூட வந்தது. அவர்களுக்கும் அரசு உதவி செய்தது. இது ஒரு தொற்று நோய் இவ்வளவு பரிசோதனை எந்த மாநிலமும் செய்ததில்லை. மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி அர்ப்பணிப்புமிக்கது.
அவர்களை பாராட்டக்கடமைப்பட்டுள்ளேன். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்கள் செய்யும் பணியை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அரசைப்பொருத்தவரை அனைத்தும் சரியாக நடந்து வருகிறது.
சமூக பரவல் என்பது இல்லை. ஒரு கட்டுப்படுத்தப்பட்டப்பகுதி சின்ன சின்ன வீடு நெரிசலான வீடு அங்குதான் தொற்றே அதிகமாக ஆகிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்கிறோம்.
ஆனால் யாரும் கடைபிடிக்க மாட்டேங்கிறாங்க. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்தான் அதிக பரவல் ஏற்படுகிறது. ஆகவே அதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக தளர்வு கொண்டுவந்துள்ளோம். அடுத்து மத்திய அரசு சொல்லும் வழிப்படி செயல்படுத்தப்படும். அண்டை மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் 719 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. தொடர்ந்து பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வெளிமாநிலத்திலிருப்பவர்களை அழைத்து வரச்சொல்லி வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு வருபவர்களை தனிமைப்படுத்தி சோதனையிடும்போது அதிக அளவில் தொற்று உள்ளது தெரிகிறது.
அதனால் அப்படி வருபவர்கள் மூலம் நோய் சமூக பரவலாகிவிடும் கட்டுப்படுத்த முடியாது, எனவே தான் அரசு நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது”.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.