தமிழகம்

மதுரைக்கு நடந்து செல்ல முயன்ற உத்திரப்பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

எஸ்.கோமதி விநாயகம்

கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் 7 பேர் மதுரைக்கு நடந்து செல்ல முயன்றபோது கோவில்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடி வழியாக நடந்து வந்த 7 பேரை தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்தனர்.

இதில், அவர்கள் 7 பேரும் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட ஓணமாகுளத்தில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல மதுரையில் இருந்து ரயில் புறப்படுவதாக அறிந்ததையடுத்து எந்தவித அனுமதியும் இன்றி மதுரைக்கு நடந்து செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து வட்டாட்சியர் மணிகண்டன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் ஓணமாகுளத்தில் உள்ள சோலார் நிறுவன மேலாளரிடம் பேசி தொழிலாளிகளை தங்கள் நிறுவனத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கும்படி தெரிவித்தனர். மேலும், உரிய அனுமதி வாங்கி அவர்களை ஊருக்கு அனுப்பவும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து நிறுவனத்தினர் வாகனம் மூலம் தொழிலாளர்களை மீண்டும் ஓணமாகுளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT