ரமலான் பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் மதுரை கிளையைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது, இஸ்லாமியர்களின் சிறப்பான மாதமான ரமலான் மாதத்தின் 30 நாட்களும் கடைப்பிடிக்கப்படும். இம்மாதத்தில் மட்டும் ஐந்து வேளை தொழுகை என்பதை மாற்றி இரவு 9 மணிக்கு மேல் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள்.
கூடுதலாக ஜகாத் எனப்படும் தனது வருமானத்தைக் கணக்கிட்டு அதில் மார்க்கம் கூறும் வழிப்படி குறிப்பிட்ட சதவீதத்தை தானமாக ஏழைகளுக்கு அளிப்பார்கள். இம்மாதத்தில் பள்ளிவாசல்களில் மாலை நேரத்தில் நோன்பு திறக்கும்போது நோன்புக்கஞ்சி வழங்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.
ஊரடங்கு காரணமாக மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிவாசல்களில் தொழுகை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தராவீஹ் தொழுகையும், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு, கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது அனைத்தும் சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டி தடை செய்யப்பட்டு அவரவர் வீடுகளிலேயே கடைப்பிடிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அப்போது இஸ்லாமியர்கள் காலையில் ரமலான் சிறப்புத் தொழுகையைச் செய்வார்கள். பள்ளிவாசல்கள் தவிர முக்கியமான பொது இடத்திலும் ஆயிரக்கணக்கில் கூடித் தொழுகை நடத்துவார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் கூட்டுத்தொழுகை வீட்டிலேயே தொழும் நிலை உள்ளதால் வீட்டில் தொழுது கொள்ளவும் என தலைமை காஜி அறிவித்திருந்தார்.
கரோனா ஊரடங்கால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மே 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரமலான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி திருவாரூரைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு, “ ஊரடங்கு நேரத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.