கோவை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தனியார் கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியூர் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருந்த வெளியூர் பயணிகள் சிலர் விமானநிலைய வளாகத்தை ஒட்டியுள்ள கடைகளில் நேற்று தின்பண்டங்களை வாங்கியுள்ளனர். அதில் பிரபல நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு பிஸ்கட் பாக்கெட்டில் பூச்சிகள் இருந்தது தெரியவந்தது.
அதைப் பிரித்துப் பார்த்தபோது, பிஸ்கட்டுகள் அனைத்தும் பூச்சி அரித்துக் காணப்பட்டன. 2014-லேயே அதன் அதிகபட்ச பயன்படுத்தும் காலம் முடிந்து விட்டது. காலாவதியான நிலையில், ஒரு வருடம் கழித்து அந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
வி.டி.தர்மராஜன் என்ற பயணி கூறும்போது, ‘நோயாளிகளும், வயோதிகர்களும் விமானப் பயணத்தின்போது தின்பண்டங் களையும், உடல்நலனுக்கு ஏற்ற பிஸ்கட் வகைகளையும் வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்களும் இதேபோல உணவுப் பொருட் களை வாங்கிக் செல்கின்றனர்.
இதில், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது பயணிகளின் உடல்நலனை கடுமையாக பாதிக்கும். பிஸ்கெட்டுகள் கெட்டுப்போய், பூச்சிகள் அரித்து காணப்பட்டன. காலாவதியான பொருள் என்பதைக் காட்டினால், கடைக்காரர்கள் மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். எனவே உணவு பொருட்களின் தரத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பன்னாட்டுப் பயணிகள் வந்து செல்லும் இடத்தில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வது கோவைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும்’ என்றார்.