திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3200 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பணிபுரிந்துவந்த வேற்று மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 12-ம் தேதி பிஹார் மாநிலத்தை சேர்ந்த 1330 பேர், 13-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1426 பேர், 16-ம் தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 326 பேர், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 1437 பேர் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுடில்லியிருந்து கடந்த 18-ம் தேதி தென்மாவட்ட தொழிலாளர்கள் 308 பேரும், கடந்த 19-ம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவிலிருந்து 419 பேர் நபர்கள் திருநெல்வேலிக்கு ரயிலில் வந்தனர். வேறு மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சாலை மார்க்கமாக வரப்பெற்ற 3200 பேருக்கு மாவட்ட சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சோதனையில் தொற்றுகண்ட நபர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொற்று இல்லை என்ற முடிவு வந்த நபர்கள் தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.