சந்திராயன்-2 ஆராய்ச்சிக்காக, நிலவின் மண் மாதிரியைத் தயாரித்துக் கொடுத்தமைக்கான தொழில்நுட்பத்துக்கு, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எஸ்.அன்பழகன், இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளது.
நிலவில் இறங்கி அதனை ஆராய்ச்சி செய்திடும் வகையில், சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கி விண்ணில் ஏவியது. சந்திராயனின் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இறங்கியதும், குறிப்பிட்ட நேரம் கழித்து, அதில் இருந்து சிறிய ரோபோட்டிக் வாகனமான ரோவர் வெளியேறி, நிலவின் மேற்பரப்பில் உள்ள சமவெளியில் நாற்புறமும் ஓடி, ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் சந்திராயன்-2 திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதற்காக, நிலவின் மண் தரையைப் போன்று, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் செயற்கையான மண் தரையை உருவாக்கவும், அந்த மண் தரை மீது லேண்டரைப் பாதுகாப்பாக இறக்கி, பின்னர் அதே மண் தரை மீது ரோவரை ஓட வைத்துப் பார்க்கப்பட்டது.
இந்த சோதனை ஆராய்ச்சிக்காக, நிலவின் மண்ணில் உள்ள தாது உப்புகள், ஆக்சைடுகள் ஆகியவற்றை ஒத்த, ரசாயனத் தன்மை கொண்ட அனார்த்தசைட் (Anorthosite) என்ற வகை மண், சுமார் 50 டன் வரை இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்குத் தேவைப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து, நிலவின் மண் மாதிரியை வாங்குவது, மிக அதிக செலவு பிடித்தது. எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியல் மையம் இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்பழகன் தலைமையில் பேராசிரியர்கள் டாக்டர் அறிவழகன், டாக்டர் பரமசிவம், டாக்டர் சின்னமுத்து ஆகியோரைக் கொண்ட குழுவினர், இஸ்ரோ ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் வேணுகோபால் தலைமையில் கண்ணன், ஷாம் ராவ், சந்திரபாபு குழு மற்றும் திருச்சி என்ஐடி பேராசிரியர் முத்துக்குமரன் ஆகியோர் ஒரே குழுவாக இணைந்து, சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரியை, சந்திராயன்-2 ஆராய்ச்சிக்காகத் தயாரித்துக் கொடுத்தனர்.
தற்போது, நிலவின் மண் மாதிரியை தயாரித்துக் கொடுத்த தொழில்நுட்பத்துக்காக, இக்குழுவினர் காப்புரிமை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் மற்றும் கோளியல் மையம் இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறுகையில், "நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த சித்தம்பூண்டி, கந்தம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அனார்த்தசைட் வகை பாறைகளை வெட்டி எடுத்து, அதில் இருந்து, பவுடர் போல, 25 மைக்ரான் அளவு பொடியாக அரைத்து, இஸ்ரோவுக்கு வழங்கினோம்.
இதற்கான தொழில்நுட்பத்தை எங்கள் குழுவே பிரத்யேகமாக உருவாக்கியது. இந்த தொழில்நுட்பத்துக்காக, காப்புரிமை கோரி, மத்திய அரசின் அறிவுசார் காப்புரிமை மையத்தில் (IPR) கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்திருந்தோம். பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பின்னர், தற்போது, நாங்கள் விண்ணப்பித்த நாளில் இருந்து, 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.