மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து ராமநாதபுரம் வந்த ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 5389 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5124 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மீதியுள்ளவர்களில் நேற்று வரை 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 26 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
கரோனோவால் பாதிக்கப்பட்ட 46 பேரில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து வந்து முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரி தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து வந்து முதுகுளத்தூர் தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்கியிருந்த முதுகுளத்தூர் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, அவரது 21 வயதுடைய தாய், மேலும் 3 வயது பெண் குழந்தை, 30 வயது பெண், 45 வயதுடைய ஆண், அவரது 19 வயதுடைய மகன், மேலும் 65, 45, 26 வயதுடைய ஆண்கள் என ஒரே நாளில் இன்று 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டத்தில் கொல்கத்தாவிலிருந்த வந்த 15 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.