ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா தனி வார்டில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் இருந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலமாக ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா தனிவார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமடைந்துள்ளதாக இஎஸ்ஐ தலைமை மருத்துவர் கீதா தெரிவித்துள்ளார்.
ஓசூர் சிப்காட் - 1 தொழிற்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுள்ள கரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனி வார்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பேர் மற்றும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 20 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கடந்த 18-ம் தேதி சூளகிரியைச் சேர்ந்த 18 பேரும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து 2 பேரும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கரோனா தொற்றிலிருந்து மீண்ட 2 பேருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பொருட்களை வழங்கினார்.
அந்தப் பொருட்களில் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்டவை அடங்கிய சித்த மருந்துப் பெட்டகம், பழங்கள், காய்கறிகள், முகக் கவசம், சானிடைசர் மற்றும் கரோனா நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட கையேடு ஆகியவை வழங்கப்பட்டன. பின்பு 2 பேரும் அவர்களுடைய இல்லங்களுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா, ஓசூர் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளார்.