மின்தடையால் இருளில் மூழ்கிய சிவகங்கை அரசு மருத்துவமனை. 
தமிழகம்

இருளில் மூழ்கிய சிவகங்கை அரசு மருத்துவமனை: மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்ததால் சர்ச்சை 

இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன்பு மின்தடை ஏற்பட்டபோது, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஜெனரேட்டர் வசதி இல்லாத்தால் நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

உள்நோயாளிகளாக 700 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் மின்தடை ஏற்படும் காலங்களில் அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்களுக்காக 3 ஜெனரேட்டர்கள் உள்ளன. இதில் ஒரு ஜெனரேட்டர் பல ஆண்டுகளாக இயங்கவில்லை.

இந்நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவுப்படி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கென தனிக்கட்டிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடத்திற்கு ஜெனரேட்டர் வசதி இல்லை. இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு வீசிய சூறவாளி காற்றால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அதிருப்தி அடைந்தனர். மேலும் அவசர சிகிச்சை பிரிவில் மொபைல் போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.எஸ்.கண்ணன் கூறுகையில், ‘ அவசர சிகிச்சை பிரிவில் ஜெனரேட்டர் வசதி இல்லாதது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும்,’ என்று கூறினார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து ஜெனரேட்டர் வைக்க சொல்லி பல முறை பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பி விட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

மின்தடை ஏற்பட்ட சமயத்தில் தீவிர சிகிச்சையில் யாரும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் அருகேயுள்ள ஐசியு வார்டிற்கு மாற்றியிருப்போம்,’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT