பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

சரக்கு லாரிகளில் பதுங்கி சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

வி.சீனிவாசன்

வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளில் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது அதிகரித்துள்ளதால், அதிகாரிகளின் அனுமதி கடிதம் வைத்துள்ளவர்களை மட்டும் அழைத்து செல்ல லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் தளர்வு காரணமாக வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, அரசு இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கி வருகிறது.

இவ்வாறு இ-பாஸ் அனுமதி பெறும் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியதும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் நோய் தொற்று இல்லை என உறுதியானதும் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களில் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை சிக்கல் காரணமாக 14 நாட்கள் வீடுகளில் தனிமையில் இருக்க விரும்பாத தொழிலாளர்கள் பலரும், இ-பாஸ் பெறாமல் சரக்கு லாரிகள் மூலம் பதுங்கி, அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு சரக்கு லாரிகளில் சொந்த ஊர் திரும்புபவர்களுக்கு கரோனா பரிசோதனை ஏதும் செய்யப்படாததால், தொற்று உள்ளவர்களால் பலருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால், சரக்கு லாரிகளில் சொந்த ஊர் திரும்புவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களிடம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அளித்த அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகளில் ஏற்றி கொண்டு அழைத்து வர வேண்டும் என்று சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

லாரிகளில் பதுங்கி பலரும் சொந்த ஊர் திரும்பி வரும் நிலையில், அனைத்து மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் அனுமதி கடிதம் இல்லாமல் யாரேனும் பயணம் செய்கின்றனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT