வருவாயை அதிகரிக்க மதுக்கடைகளை ஏலம் விட 4 ஆண்டுகளாக ராஜ்நிவாஸ் வலியுறுத்துவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சியினருக்கும், அவருக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி வளர்ச்சி தொடர்பாக தனக்கு கடிதம் தந்த அதிமுக எம்எல்ஏ அன்பழகன், காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்பான விவரங்களை குறிப்பிட்டு அவர் அளித்த பதில்:
"புதுச்சேரியிலுள்ள ஆளுநர் அலுவலகமான ராஜ்நிவாஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் எடுக்க ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. ஏனெனில், இதன் மூலம் கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்தலாம்.
கலால்துறையில் வெளிப்படையான மேலாண்மை உருவாகும். தனியார் நிறுவனங்களின் சொத்துகளுக்கு வரி விதிப்பு, கேபிள் டிவி மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பை முறைப்படுத்துவது, மின்சாரம், வணிக வரி மற்றும் சொத்து வரி உள்பட பல நிலுவைத் தொகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கோரினோம். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் கோரினோம். மோட்டா’ர் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்க கோரினோம்.
இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் விருப்பத்துக்காகவே காத்துள்ளன.
குறிப்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் கூடுதலாக புதுச்சேரி அரசு இத்திட்டங்களை செயல்படுத்தினால் ரூ. 4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுச்சேரி அரசு பார்க்க வேண்டும்.
அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். இந்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. இதுபோன்ற நிலையை புரிந்து கொள்ளவும், அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை இன்றைய அரசு ஏற்படுத்துவது அவசியம். அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். துணைநிலை ஆளுநர் அலுவலகம் முழு ஆதரவையும் இப்பணிகளுக்கு வழங்கும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.