பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ள நிலையில், காமராஜர் அரங்கத்தில் பணியாற்றிய பெண் ஊழியரை தாக்கிய புகாரிலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள் ளது.
இளங்கோவனின் பேச்சைக் கண்டித்து அதிமுக, பாஜகவினர் போராடி வந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து நேற்று ‘தி இந்து’விடம் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம், ‘‘ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை கொச்சைப்படுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாக செய்திகள் வந்துள்ளன. அந்த அடிப்படையில் இது குறித்து 5 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீல் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
தமிழக காங்கிரஸ் அறக்கட்ட ளைக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பணியாற்றிய வளர்மதி என்பவர் கடந்த ஜனவரி 5-ம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இளங்கோ வன் உள்ளிட்டோர் தன்னை தாக்கியதாகவும், கொடுமைப் படுத்தியதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வளர்மதி புகார் மனு அளித்தார்.
இது குறித்து லலிதா குமாரமங்கலத்திடம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. விரைவில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்’’ என்று தெரிவித்தார்.