தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு உறவினர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும், கல்லறைகளிலும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை அலங்கரித்து வைத்து பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்றவர்கள் கறுப்பு ஆடை மற்றும் கறுப்பு நிற முகக்கவசம் அணிந்திருந்தனர்.
திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் அரங்கில் வைத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் வைத்தும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தங்கள் அலுவலகங்களில் அஞ்சலி செலுத்தினர்.
இதேநேரத்தில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திறந்த வெளியில் பொது அஞ்சலி கூட்டம் போன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
மேலும், கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ஆதார் எண்களை கேட்டு வாங்கிய பிறகே அனுமதித்தனர். துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.