கொத்தமங்கலத்தில் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க இளைஞரால் உருவாக்கப்பட்ட சிறிய குடிநீர் வாகனம். | படம் கே.சுரேஷ். 
தமிழகம்

தலைதூக்கும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க புதுக்கோட்டை இளைஞர் வடிவமைத்த 'குட்டி' குடிநீர் வாகனம்

கே.சுரேஷ்

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க குடிநீர் பிரச்சினையும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது.

இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தனது வீட்டில் பயனின்றி இருந்த கிணற்றை மழை நீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றி, 18 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தி வருகிறார் வீரமணி. முன்மாதிரியான இந்த அமைப்பைப் பாராட்டி தமிழக அரசும், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அலுவலர்களும் பாராட்டினர்.

தற்போது, இப்பகுதியில் மழை இல்லாததால் மழைநீர்த் தொட்டியிலும் தண்ணீர் இல்லை. இதைத் தொடர்ந்து, பிற இடங்களில் தண்ணீர் பிடித்து வருவதற்காக காயலான் கடையில் கிடந்த மோட்டார் சைக்கிள்களின் 3 சக்கரங்களைக் கொண்டு சிறிய அளவிலான வண்டியை வடிவமைத்தார்.

அதன் மீது 200 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டியை வைத்து தனது மோட்டார் சைக்கிளோடு வண்டியை இணைத்து குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்துகிறார். இந்த வண்டியை அண்டை வீட்டாரும் பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து எம்.வீரமணி, 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

"கொத்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் குடிநீருக்காக 1,000 அடியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை. அந்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் கோடையில் குடிநீர் பிரச்சினையைச் சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. மழையும் இல்லாததால் மழைநீர்த் தொட்டியிலும் தண்ணீர் இல்லை. இதனால், பொது குடிநீர்க் குழாய் மற்றும் பிற இடங்களில் இயங்கும் விவசாய மோட்டார்களில் இருந்து புதிதாக வடிமைக்கப்பட்ட வண்டியை தனது மோட்டார் சைக்கிளோடு இணைத்துச் சென்று ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம்.

வெகுதூரம் சென்று ஒவ்வொரு குடமாக குடிநீர் பிடித்து வர முடியாததால் இந்த முயற்சியை மேற்கொண்டேன்".

இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT