தமிழகம்

வேலை நேரம் அதிகரித்ததைக் கண்டித்து கோவில்பட்டியில் தொழிற்சங்கங்கள் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

எஸ்.கோமதி விநாயகம்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதைக் கண்டித்து கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது. 8 மணி நேர வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது. பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.

கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களில் நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்க தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

கரோனா வைரஸூக்கு எதிராக களப் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், மின்சாரம், வருவாய்த்துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐந்தாம் தூண் அமைப்பின் நிறுவனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குருசாமி தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ் பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரத்தில் ஏஐடியுசி சார்பில் கட்டுமான சங்க செயலாளர் சேது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT